தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 

தமிழ்நாடு காவல்துறை ஓய்வு பெற்ற அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட   பொதுக்குழு கூட்டம்  மாவட்டத் தலைவர் சுதந்திர ராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் இராமுக்கண்ணு சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கிப் பேசினார். சென்ற கூட்டத்திற்குப்  பிறகு இயற்கை எய்திய உறுப்பினர்கள் அப்துல் ரஷீத் மற்றும் மணிமாறன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

சுதந்திர ராஜன் பேசும்போது இன்றைய சூழலில் பொதுவாக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் மத்திய, மாநில அரசுகள் எவ்வாறு ஊழியர் விரோத போக்கினை கடைப்பிடிக்கின்றன என்பதை விளக்கினார். வழக்கமாக நாம் அடைந்து வந்துள்ள அகவிலைப்படி உயர்வு போன்ற கோரிக்கைகளை கூட பெறுவதற்கு போராட வேண்டிய சூழல் ஏற்பட்டு விட்டது என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

இராமுக்கண்ணு பேசும் போது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதை ஒரு சம்பிரதாய நிகழ்வாக கருதாமல் அதை தங்களது கடமையாகக் கருத வேண்டும் என்றும் அதன் மூலம் நாம் அடிக்கடி சந்தித்து கலந்துரையாடும் நல்ல வாய்ப்பு கிட்டும் என்றும் எடுத்துக் கூறினார். மேலும் வயதான காலத்தில் உறுப்பினர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்க கூடாது எனவும் மாறாக தொடர்ச்சியாக சுற்றியுள்ள சமூகத்துடன் இணைந்து உறவாடி தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் கூறினார். அதன் மூலம் தன்னுடைய உடல் நலம், மன நலம் இரண்டையும் நன்கு பேணிப் பாதுகாத்து கொள்ள முடியும் என்பதையும் விளக்கினார்.

பொருளாளர் இராசமாணிக்கம் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற்றார். அத்துடன் ஓய்வூதியர்கள் பிறர் கையை நம்பி இராமல் தாமே ஒரு தொழில் முனைவோராக உருவாவதற்கான பல்வேறு வாய்ப்புகளை எடுத்துக் கூறினார். அதன் பின்னர் உறுப்பினர்கள் அனைவரும்  ஆக்கப் பூர்வமான பல கருத்துக்களை எடுத்துக் கூறினர். அவற்றின் மீது ஆரோக்கியமான விவாதம் நடைபெற்றது.

அதன் பின் கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்களை நிறைவேற்றப் பட்டன.

1. தமிழ் நாடு அரசுப் பணியாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு, குறித்த காலத்தில் வழங்காமல் தமிழக அரசு காலம் கடத்துவது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்கிறது. மேலும் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுகளை மாநில அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.

2. ஓய்வூதியர்களுக்கு அவர்கள் 65 வயதை எட்டும் போது 10 சதவீதம், 70 வயதில் 20 சதவீதம், 80 வயதிற்கு மேல் 50 சதவீதம் ஓய்வூதிய உயர்வு வழங்குதல் வேண்டும் என்ற கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து ஆணை வழங்க வேண்டும் எனவும் மாத அரசைக் கேட்டுக் கொள்கிறது.

3 . மாண்புமிகு தமிழக முதல்வர் தனது தேர்தல் அறிக்கையில் வாக்களித்த படி அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

4. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்கி அவர்கள் மருத்துவ சிகிச்சைக்கான முழு செலவுகளையும் காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் எவ்வித சந்தேகங்களுக்கும் இடமளிக்காமல் தெளிவான, உறுதியான வழிமுறைகளை வெளியிட வேண்டும் எனவும் மாநில அரசை இக் கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறது. இறுதியாக உறுப்பினர் இராமு நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.