தமிழர்களின் நாகரீக வரலாற்றை அழியாமல் பாதுகாத்த பெருமை புதுக்கோட்டை மக்களுக்கு உண்டு – தொல்லறிவியலாளர் மணிகண்டன்

தமிழர்களின் நாகரீக வரலாற்றை அழியாமல் பாதுகாத்த புதுக்கோட்டைப்பகுதி மக்கள் உண்டு என தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரி, வரலாற்று ஆய்வுத்துறை ஆண்டு விழா கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமையில் நடந்தது. வரலாற்றுதுறை துணைப்பேராசிரியர் நீலாவதி வரவேற்றார். புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தலைவர் கரு.ராசேந்திரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான ஆ.மணிகண்டன் கலந்து கொண்டு புதுக்கோட்டையின் புதிய தொல்லியல் அகழாய்வுகள் எனும் தலைப்பில் பேசினார். அப்போது புதுக்கோட்டையில் ஆங்கிலேயர் காலத்திலேயே, தொண்டைமான் மன்னர்களின் நிதி நல்கையோடு நிகழ்த்தப்பட்ட புல்வயல், கோவில் வீரக்குடி அருகே திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் விரிவாக நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுகள் குறித்தும், புதுக்கோட்டை மாநிலம், தொல்லியல் சின்னங்களை பாதுகாப்பத்தற்கு பெரும் சிரத்தை எடுத்திருப்பதை, தொண்டைமான் மன்னர்களின் நிர்வாக அறிக்கைகள் மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது,

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழங்கற்காலம் தொடங்கி சமீபத்திய ஆங்கிலேயர்களின் கல்வெட்டுகள் வரை பல்வேறு காலகட்டங்களில் நடந்த பண்டைய மக்களின்  வாழ்வியல், பண்பாட்டு கூறுகள், சின்னங்கள், நிர்வாக நடைமுறைகள் குறித்த கல்வெட்டு சான்றுகள்  என அனைத்து வகை தொல்லியல்  பதிவுகளும் நிறைந்த மிக முக்கியமான பகுதியாகும். புதுக்கோட்டையின் வரலாற்று சான்றுகள் இதுநாள் வரை பாதுகாக்கப்பட்டு வருவதற்கு காரணம், இங்குள்ள மக்கள் வரலாற்று சின்னங்களை தமது பண்பாட்டு பின்னணியோடு பிணைத்து வழிபாடு மற்றும் நம்பிக்கை அடிப்படையில் அழியாமல் பாதுகாப்பவர்களாக, இருந்து வருகின்றனர். அப்படி பாதுகாக்கப்பட்ட மிக முக்கிய சின்னமாக பொற்பனைக்கோட்டை திகழ்கிறது. தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வை மேற்கொள்ளவிருக்கிறது. உலகலாவிய சான்றுகளான ஆம்போரா ஒத்த குடுவைகள், ரோமாபுரி நாட்டில் காணப்படும் இம்ப்ரக்ஸ் முகட்டு ஓடுகள், பல வண்ண மணிகள், நீர்க்குடுவையின் குமிழ்கள், சுடுமண் காதணிகள்,பொம்மைகள், வட்டவடிவ சில்லுகள் மிகுதியாக கிடைக்குமிடமாக பொற்பனைக்கோட்டை இதுவரை இருந்துள்ளது. அரண்மனை மேட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது புதிய தகவல்களை நாம் பெற இயலும்.

அது இந்திய வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்துவதோடு, இந்திய ஒன்றியத்தின் வரலாறு தமிழகத்திலிருந்து எழுதப்படவேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்திற்கு, இந்த அகழ்வாய்வு  முடிவுகள் வலுசேர்க்கும் என்றார். இறுதியில் ஆய்வுரை வரலாற்று துறை முதுகலை இரண்டாமாண்டு மாணவி அபராமி நன்றி கூறினார்.ஒருங்கிணைப்பு பணியை துறைத்தலைவர் காயத்ரி தேவி  செய்திருந்தார். நிகழ்வில் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள்,ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர்.