
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் நேற்று தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். இந்தநிலையில், தமிழகம் முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் வழங்கப்படுகிறது. புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட திருக்கோகர்ணம் தொடக்கப் பள்ளியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் காலை உணவு திட்டத்தினை துவக்கி வைத்து மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். இந்த நிகழ்வில் கலெக்டர் கவிதா ராமு, எம்எல்ஏ முத்துராஜா,முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.