தமிழக நகர்புறங்களை ஒட்டி இருக்கிற கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்திட வேண்டும்: பிஆர் பாண்டியன்

அறந்தாங்கி வயிறிவயல் ஏரி உட்பட தமிழக நகர்புறங்களை ஒட்டி இருக்கிற கிராமங்களில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்திடுக முதலமைச்சருக்கு பிஆர் பாண்டியன் வேண்டுகோள்.

தமிழக அனைத்து விவசாயிகள சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பிஆர்.பாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வயிறிவயல் கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாயிகள் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஏரியில் அறந்தாங்கி நகர கழிவுநீர் முழுமையும் கலக்க செய்து இந்த ஆண்டு சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து விவசாயிகள் புகார் தெரிவித்ததை அடுத்து இன்று நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:

கர்நாடக மாநிலம் பெங்களூர் மாநகரம் வரலாறு காணாத மழைப்பொழிவை சந்தித்திருக்கிது அங்கே பெய்திருக்கக்கூடிய அனைத்து வெள்ள நீரும் தென்பெண்ணை ஆற்றில் தமிழகம் வழியாக வங்கக்கடலில் சென்று கலக்க வேண்டும். தற்போதைய நிலையில் பெங்களூர் நகரம் எதிர்கொண்டிருக்கிற மழைப்பொழிவை தென்பெண்ணை ஆறு கொள்ளளவை விட பல மடங்கு கூடுதலாக இருக்கும் என தகவல்கள் வருகிறது.அப்படி வரக்கூடிய வெள்ள நீர் கடலுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதோடு,வழியோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள்பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது. வழியோர மக்களை பாதுகாப்பதற்கு தமிழக முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் இருக்கிற நதிகளை இணைப்பதை திசை திருப்புவதற்காக கோதாவரி – காவிரி இணைப்பு என்கிற பேரில் திசைதிருப்பக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஓடக்கூடிய அனைத்து நதிகளின் உபரிநீர் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக  தலா 2000ம் டிஎம்சி தண்ணீர் ஆண்டுதோறும் கடலில் கலக்கிறது.இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் ஓடக்கூடிய நதிகளை இணைப்பதற்கு முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும்  முடிந்த வரையில் சேமிப்பதற்கு வழியோர பகுதிகளில் இருக்கிற ஏரிகளை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி கட்டமைப்புகளை சீரமைத்து தண்ணீரை சேமிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். தமிழக நகரங்களில் வெளியேறக்கூடிய கழிவுநீர் ஒட்டி இருக்கிற கிராமப்புற பகுதிகளில் இருக்கிற நீர் நிலைகளில் கலக்க செய்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அறந்தாங்கி நகராட்சி அருகே உள்ள வயிறிவயல் கிராமத்தில் 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பாசன ஏரி நகரத்தின் கழிவுநீர் முழுமையும் கலக்க செய்து துர்நாற்றம் வீசுகிறது. கிராமத்தில் மக்கள் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்துவந்த விவசாயிகள் தற்போது சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.தண்ணீரில் கை வைத்தாலே அரிப்பு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது என விவசாயிகள் பரிதவிக்கிறார்கள். எனவே இந்த ஏரியை தூர்வாரி கடைகளை பலப்படுத்துவதோடு,கழிவுநீர் தேங்கி இருப்பதை உடனடியாக வெளியேற்றிவிட்டு நகரப் பகுதியிலிருந்து கழிவை கலக்க செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும்.ஏரியை மறு பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழக அரசு போர் கால நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.மறுத்தால் விவசாயிகளை கூட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றார். தமிழக காவிரி விவசாய சங்கத்தின் மாநில தலைவர் தஞ்சை பழனியப்பன், துணைச் செயலாளர் எம்.செந்தில் குமார், வயிறிவயல் கிராம முன்னோடி விவசாயிகள்50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.