தமிழகத்தில் இன்று தொடங்கியது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 43,051  மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது.

தமிழகத்தில் கொரோனாவின் 3ஆவது அலையை வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். அதன்படி தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டியும் வருகிறார்கள். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை இருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசிடம் இருந்து கணிசமான தடுப்பூசியை தமிழக அரசு வாங்கியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்றைய தினம் மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்துகிறது.

தமிழகத்தில் 43,051 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த தடுப்பூசி முகாம் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் 20 லட்சம் தடுப்பூசிகளை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ரோட்டரி சங்கங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையினர், உள்ளாட்சி துறையினர் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோரில் 3 .48 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.