தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தமிழ்நாடு கடற்கரை மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்யக்கூடும்.
அதன்படி இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதேபோல் நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும். அதேபோல் வருகிற 25ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வருகிற 26ம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று பிற்பகலில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும். மேலும் இன்று மற்றும் நாளையும் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும், வருகிற 25 மற்றும் 26ம் தேதிகளில் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடைஇடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.