தனித்துப் போட்டியிடுவது என்பது பாமகவின் தனிப்பட்ட முடிவு: ஜெயக்குமார் பேட்டி!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது அவர்களின் உரிமை. ஆனால் அதிமுகவை விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக தன்னிச்சையாக நேற்று  அறிவித்தது. இதற்கு பாஜகவின் அமித்ஷா, இந்தி மொழியை தொடர்ந்து புகழ்வதும், தமிழகத்துக்கு எதிரான பல்வேறு பாஜக நடவடிக்கைகளை கண்டித்தும், கூட்டணி தர்மத்தை அதிமுக கடைப்பிடிக்காததாலும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக பாமக தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின்  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எங்கள் கூட்டணியில் இருந்து விலகியதால் பாதிப்பு பாமகவுக்கு தான்.பாமக முடிவெடுக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அதிமுகவை விமர்சிக்க உரிமையில்லை. அதிமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை ஏற்க முடியாது. அதிமுகவை பாமக விமர்சித்தால் நாங்களும் விமர்சிக்க நேரிடும்.அதிமுகவின் உட்கட்சி விவகாரம் பற்றி பேசுவதற்கு யாருக்கும் தகுதி கிடையாது.

அதிமுக ஆட்சியில் செய்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்வோம். அதிமுகவின் வாக்கு வங்கியில் எந்த பாதிப்பும் இல்லை. தனித்துப் போட்டியிடுவது என்பது பாமகவின் தனிப்பட்ட முடிவு.யாருடைய கட்டாயத்தின் பேரில் தனித்துப் போட்டி என முடிவெடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்றார்.