தஞ்சாவூரில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி இரண்டாவது அணி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நேற்று துவங்கப்பட்டது. 

இப்பயிற்சியினை தஞ்சாவூர் பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி முன்னிலையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார். இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த 9 தாலுக்காவிலிருந்து 30 தன்னார்வலர்கள்பங்கேற்றுள்ளனர், இப்பயிற்சி 10.09.22 முதல் 21.09.22 வரை 12 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சியில் தினசரி சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பேரிடர் மேலாண்மையின் அடிப்படை தயார்நிலை, நிலநடுக்கம், நிலசரிவு, வெள்ளம், புயல், சுனாமி, சூறாவளி, இடி மின்னல், வறட்சி, அடிப்படை தேடல், மீட்டு, உடல் நலம், முதலுதவி, உயிர் காப்பு, பாம்பு கடி, விஷ விலங்குகள் கடி, தீ பாதுகாப்பு, ரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசர நிலை பாதுகாப்பு குறித்து படங்கள் மற்றும் செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் பொறியாளர் முத்துக்குமார், ஜூனியர் ரெட்கிராஸ் மாவட்ட அமைப்பாளர் பிரகதீஷ், பயிற்றுநர்கள் ஷேக் நாசர், பயோகேர் முத்துக்குமார், பேரிடர் மைய என்.ஜி.ஓ ஒருங்கிணைப்பாளர் ஜான்ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.