டெல்லி வந்தடைந்தார் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர்

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினரான எகிப்து அதிபர் அல் சிசி தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.

நாட்டின் 74வது குடியரசு தினம் நாளை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக எகிப்து அதிபர் அல் சிசி நேற்று மாலை டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் நாட்டுப்புற நடனக் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் எகிப்து அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவும் டெல்லி வந்துள்ளது.

4 நாள் பயணமாக டெல்லி வந்துள்ள அல் சிசி,இன்று குடியரசுத் தலைவரை குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று சந்திக்கிறார். அப்போது, குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட இருக்கிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து அல் சிசி பேச உள்ளார். டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்குச் சென்று மரியாதை செலுத்தும் எகிப்து அதிபர், பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் சந்திக்க இருக்கிறார். அப்போது, இருதரப்பு உறவுகள், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

அதனைதொடர்ந்து இந்திய தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ள எகிப்து அதிபர், தங்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க இருக்கிறார். இதையடுத்து, இன்று மாலை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் சிறப்பு விருந்தில் அல் சிசி பங்கேற்கிறார். நாளை நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் அல் சிசி, இந்தியாவின் முப்படைகளின் அணிவகுப்புகளைப் பார்வையிட உள்ளார். இந்த அணிவகுப்பில், எகிப்தின் ராணுவ வீரர்களைக் கொண்ட குழுவும் பங்கேற்க இருக்கிறது. எகிப்து அதிபரின் இந்த பயணத்தின்போது, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.