டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரைக்காலில் ஆர்பாட்டம்

காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.

சர்தார் சர்வன் சிங் பந்தேர் ஒருங்கிணைப்பிலான கிசான் மஸ்தூர் மோர்ச்சா மற்றும் சர்தார் ஜக்ஜீத் சிங் தல்லேவால் ஒருங்கிணைப்பிலான கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் 100 சங்கங்கள் ஒன்றிணைந்து “டெல்லி சலோ” என்று நாட்டின் தலைநகரை நோக்கி முன்னெடுத்த போராட்டத்திற்கு ஆதரவாக, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஐக்கிய விவசாயிகள் சங்கம், இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கம், டாடா மேஜிக் ஓட்டுநர் நலச்சங்கம், தமிழ்நாடு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் பேரவை, பஜன்கோவா ஊழல் எதிர்ப்பு, மேம்பாடு மற்றும் ஊழியர் நலச்சங்கம் ஒருங்கிணைந்து நேற்று இரவு 7 மணி முதல் 10 மணி வரை காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகே டாக்டர் எஸ்.அனந்த்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய சங்கங்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடந்த 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை இன்று வரை 434 காரைக்கால் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அது வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும். கடந்த 2023 ஆம் ஆண்டு பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 தேதிகளில் பெய்த தொடர் காண மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் காரைக்கால் விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பஜன்கோவா விவசாயக் கல்லூரியில் சுமார் 100 மாணவ மாணவியர் காலாவதியான உணவு பொருட்களால் பாதிப்படைந்து, அவர்களில் சுமார் 40 மாணவியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து 28.11.2023 அன்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட நியாயாதிபதி விசாரணை கமிட்டி 04.12.2023 முதல் பல நாட்கள் நடத்திய அதிரடி சோதனைக்கு பிறகு தற்போது பஜன்கோவா டீன் பதவி வகிக்கும் புஷ்பராஜ் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய அரசுக்கு பரிந்துரைத்ததாக அரசு வட்டாரங்களில் பேசப்பட்டதை தொடர்ந்து, மர்மமான அந்த விசாரணையின் விவரம் அந்தரங்கமாக உள்ள நிலையில் பெரும் லஞ்சம் கை மாறியதால் அந்த கோப்பு எங்கேயோ நின்று உள்ளதாக சந்தேகம் எழுந்த சூழ்நிலையில், அந்த உயர்மட்ட குழுவின் அறிக்கை என்ன என்று தெரிவிக்காமல் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தருணத்தில், அதிகாரப்பூர்வ ஆவணங்களை வைத்து தகவல் திரட்டி மத்திய புலனாய்வு துறை விசாரணை செய்ய புகார் கொடுக்க வேண்டும் என்று பொது கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுதந்திரகுமார் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு விண்ணப்ப எண் 124 / 2013 கொண்ட வழக்கில் கடந்த 12.09.2013 அன்று பிறப்பித்த ஆணையை அவமதித்து, அதில் விதிக்கப்பட்ட நடைமுறைகளை அத்து மீறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கை இல்லாமல், பொதுமக்களிடம் ஆலோசனை கேட்கும் கூட்டம் நடத்தாமல், குடியிருப்பு மற்றும் திட்டத்திற்கு மத்தியில் இடைப்பகுதி விடாமல், வெளிப்படைத்தன்மை இன்றி ஒரு தனியார் நிறுவனத்திற்கு தவறாக லாபம் கிடைக்கவும் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கு தவறான பாதிப்பு நேரும் விதமாக, விவசாயத்திற்கு பயன்படும் என்று மடை மாற்றம் செய்து, தீய உள்நோக்கத்துடன் பாரபட்சமாக, ஒருதலைப்பட்சமாக, ஓரவஞ்சனையாக, சுயலாபத்திற்காக பொதுநலனுக்கு குந்தகம் விளைவிப்பது, ஊழல் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், சட்ட மன்ற உறுப்பினர், அரசு செயலர் மற்றும் அமைச்சர் மீது மத்திய புலனாய்வு துறையிடம் புகார் அளித்து பிறகு நடவடிக்கை இல்லாவிட்டால் உயர் மற்றும் உச்ச நீதி மன்றதில் வழக்கு தொடரப்படும் என்று புதுத்துறை, தர்மபுரம் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக அத்திபடுகை விவசாயி குருமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். தலத்தெரு விவசாயி மோகனசுந்தரம் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். மேலக்காசாக்குடி விவசாயி ரகுவரன் விவசாயத் துறை மற்றும் மற்ற துறைகளில் உள்ள ஊழல், லஞ்சம் பற்றி பேசினார். தென்பாதி விவசாயி வீரராகவன் சிறப்புரை ஆற்றினார். விவசாயிகள் ரவி, சுப்ரமணியன், கலியமூர்த்தி, மயிலை கப்பூர் விவசாயிகள் வெங்கட்ராஜூ, ராஜேந்திரன் மற்றும் பல முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.

டாடா மேஜிக் ஓட்டுநர் நலச்சங்கதின் நிருவாகிகள் சந்திரசேகர், செல்லத்துரை தமிழ்நாடு போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் பேரவையின் காமராஜ், ராமஸ்ரீனிவாசன், பஜன்கோவா ஊழல் எதிர்ப்பு, மேம்பாடு மற்றும் ஊழியர் நலச்சங்கதின் சச்சிதானந்தன், ரமேஷ், அந்தந்த சங்க உறுப்பினர்கள், விவசாயக் கூலி தொழிலாளர்கள், மற்றும் புதுத்துறை கிராம மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர். சபாபதி, சதிஷ், மாதவன், ரங்கராஜன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். இயற்கை விவசாயி பொன்பேத்தி ராஜேந்திரன் நிகழ்ச்சியின் இறுதியில் நன்றி உரைத்தார்.