ஜார்க்கண்டில் நிலக்கரி திருட்டு: 4 பேரை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர்

ஜார்க்கண்ட் மாநிலம் தான்பத் மாவட்டத்தில் நிலக்கரி திருடும் கும்பலை தடுத்தபோது ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பாக்மரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெனிதிஹ் நிலக்கரி சேமிப்பு பகுதியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் நிலக்கரியை திருடுவதை பார்த்தனர். அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், நிலக்கரி திருட்டை தடுத்தனர். அப்போது நிலக்கரி திருடர்கள் திடீரென தாக்கத் தொடங்கினர்.

இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 4 திருடர்கள் சுட்டுககொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

ஆயுதங்களுடன் நிலக்கரி திருடர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.