ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் பதிவு முறை கூடாது: விஜபாஸ்கர் வலியுறுத்தல்

“ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் முறையில் பதிவு செய்து டோக்கன் பெறும் முறை கடைப்பிடிக்கப்படுவதை கைவிட வேண்டும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

திருச்சி மாவட்டம் சூரியூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கடந்த காலங்களில் நடத்தியதுப் போல, காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி நடத்தும் நடைமுறையைத் தொடர வேண்டும்.

மேலும் போட்டிகளில் பங்கேற்பதற்கு, ஆன்லைன் முறையில் டோக்கன் பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்படுவதை கைவிட வேண்டும். இது ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரும் எழுதப் படிக்க தெரியாத ஏழை எளிய மக்களுக்கு இந்த ஆன்லைன் நடைமுறைகள் எல்லாம் தெரியாது. ஜல்லிக்கட்டு என்பது ஒரு விருந்தோம்பல் கலாச்சாரம். கிராம கமிட்டியினர் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கும் விருந்தோம்பல் பண்பாகும். இது ஆன்லைன் நடைமுறைகளில் கிடைக்காது. அதேசமயம் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக அரசு விதிக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் தயாராகவே உள்ளனர்.

தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் வழியே டோக்கன்களை வழங்கலாம். தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கிராம கமிட்டியினர், வரி வசூல் செய்து மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துகின்றனர். எனவே, ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான டோக்கன்களை கிரமா கமிட்டியைச் சேர்ந்தவர்கள் வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.

அதேபோல், தற்போது நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில், டோக்கன் முறைப்படி மாடுகளை அவிழ்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். மேலும்,
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் காளைகளின் உரிமையாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும்.மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கினால் அது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதுபோல் இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டியை விளையாட்டாக பார்க்காமல் அதை உயிரோட்டமான விழாவாக பார்க்க வேண்டும்.

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி புதுகோட்டை மாவட்டத்தில் நடந்தது. கடந்தாண்டுகூட புதுகோட்டை மாவட்டத்தில்தான் அதிகமான இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்தன. எனவே, போட்டி நடந்த அனுமதி கேட்பவர்களுக்கு அரசு அனுமதி வழங்க வேண்டும். சென்னையில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவது வரவேற்கத்தக்கது” என்று அவர் கூறினார்.