“ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் முழு பலத்தையும் பயன்படுத்தும்” ராகுல் காந்தி

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் கட்சி தனது முழு பலத்தையும் பயன்படுத்தும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை இன்று ஜம்மு நகருக்குள் நுழைந்தது. அப்போது, ஏராளமானோர் கூடி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், ராகுல் காந்தியின் யாத்திரையில் இணைந்து அவர்களும் நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, ”ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதுதான் இம்மாநில மக்களின் மிகப் பெரிய கோரிக்கை. மாநில அந்தஸ்து விவகாரத்தைவிட பெரிய விவகாரம் வேறு இல்லை. உங்கள் உரிமை உங்களிடம் இருந்து பறிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்க காங்கிரஸ் கட்சி உங்களுக்கு ஆதரவாக இருக்கும். நாங்கள் எங்கள் அனைத்து பலத்தையும் இதற்காகப் பயன்படுத்துவோம். தங்களின் கோரிக்கையை ஆட்சியாளர்கள் கேட்பதில்லை என்ற வேதனையை ஜம்மு காஷ்மீர் மக்கள் என்னிடம் பகிர்ந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீரில் தற்போது வர்த்தகம் அனைத்தும் வெளியாட்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது. இம்மாநில மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதற்கு முன், ராணுவம் அதிக வேலைவாய்ப்பை வழங்கி வந்தது. தற்போது, அக்னிவீரர் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களுக்கு ராணுவத்திலும் வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை” எனக் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமலில் இருந்த சிறப்பு சட்டப் பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசியல் கட்சிகள் கோரி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.