செப்.27-ல் நாடுதழுவிய வேலை நிறுத்தம்: விவசாயிகள் ஐக்கிய முன்னணி அறிவிப்பு!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி செப்.27 அன்று நாடுதழுவிய அளவில் விவசாயிகள் நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 மையங்களில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமையில் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சங்கத்தின் மாநில செயலாளர் சாமி.நடராஜன் மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது.,அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட விவசாயிகள் சங்கங்கள் இணைந்து விவசாயிகள் ஐக்கிய முன்னணியை உருவாக்கி, டெல்லியை முற்றுகையிட்டு பல மாதங்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகள் ஐக்கிய முன்னணி வருகின்ற செப்.27-அன்று நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 மையங்களில் வெற்றிகரமாக நடத்துவது எனவும், ஆயிரக்கணக்கான விவசாயிகளைப் பங்கேற்கச் செய்வது எனவும் மாவட்டக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் எஸ்.பீமராஜ், ஆர்.சி.ரெங்கசாமி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.