சென்னை மாணவி பிரியா வழக்கு: கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் பிரிவுக்கு மாற்றம்: டாக்டர்கள் முன்ஜாமின் கோரி மனு

சென்னையில் கால் அகற்றப்பட்டு உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியா வழக்கை சந்தேக மரணம் என்ற பிரிவிலிருந்து கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் என்ற பிரிவிற்கு காவல்துறை மாற்றி கடுமையாக்கியுள்ளது. இந்நிலையில் டாக்டர்கள் இருவரும் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவிக்குமார், உஷாராணி தம்பதி மகள் பிரியா (17). சென்னை ராணி மேரி கல்லூரியில் பி.எஸ்.சி., உடற்கல்வியியல் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். கால்பந்து வீராங்கனையான இவருக்குப் பயிற்சியின்போது வலது கால் மூட்டு பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. இதற்காக கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், கால் வலி, வீக்கம் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவுக்குப் பரிசோதனை மேற்கொண்டதில், காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரது வலது கால் அகற்றப்பட்டது. இந்நிலையில், பிரியா கடந்த 15ம் தேதி உயிரிழந்தார்.

இதையடுத்து, கவனக்குறைவாக செயல்பட்டதாக மருத்துவர்கள் சோமசுந்தர், பல்ராம் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், பிரியா மரணம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை கடுமையாக்கியுள்ளது. சந்தேக மாரணம் என்ற பிரிவிலிருந்து கவனக்குறைவால் மரணம் விளைவித்தல் (IPC 304 A) என்ற பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. சட்ட வல்லுநர்களிடம் முறையான ஆலோசனை பெற்று மருத்துவர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் முன்ஜாமின் கோரி மருத்துவர்கள் இரண்டு பேரும் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மருத்துவர்களான பால்ராம் சங்கர், சோமசுந்தரின் மனுவின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. இந்த மனுவை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா விசாரிக்கிறார். பல அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக 2 மருத்துவர்களும் மனுவில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.