தமிழகத்தில் உள்ள பெண் மேயர்கள், துணை மேயர்கள், உள்ளாட்சி பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கோவையில் இன்று துவங்கியது. நாளை மறுதினம் வரை 3 நாட்கள் நடக்கிறது.
பயிற்சியை மகளிர் ஆணையத் தலைவி குமாரி, கலெக்டர் சமீரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், நகரியல் பயிற்சி மைய இயக்குனர் சரஸ்வதி, இணை பேராசிரியர் தமிழ்செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்.
திறன் மேம்பாட்டு பயிற்சியில் பாலினம், தலைமைப் பண்பு, உள்ளூர் நிர்வாகம், தகவல் தொடர்பு உட்பட 12 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி 5 அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் 3 நாட்கள் நடக்கிறது. திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு மகளிர் ஆணையத் தலைவி குமாரி தலைமை வகித்து பேசியதாவது:
மகளிர் ஆணையம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்களுக்கான சட்டங்கள் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பது தான் முதன்மையான பணி. சிலவற்றை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். குடும்ப வன்முறையால் பெண்கள் சிக்கி தவிக்கின்றனர்.
பெண்கள் பிரச்சினை குறித்து கிராமப்புறங்களில் இருந்து தான் அதிகளவில் மகளிர் ஆணையத்திற்கு மனுக்கள் வருகின்றன. தமிழகத்தில் 11 மாநகராட்சிகளை பெண்களுக்கு ஒதுக்கி உள்ளனர். தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பமாக உள்ளது.
பெண்கள் அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டு வருகின்றனர். நம்மை கேலி செய்பவர்களை பெருமையாக கடந்து செல்ல வேண்டும். நமது தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர் சமீரன் பேசுகையில், நீங்கள் பதவி ஏற்று 8 மாதங்கள் தான் கடந்துள்ளது. உங்களுக்கு பல தடைகள் வரும். அவற்றை தகர்த்துக் கொண்டு, ஆளுமையை வளர்த்து முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும் என்றார்.
இந்த பயிற்சியில் கோவை, திண்டுக்கல், வேலூர், மதுரை, ஈரோடு, தாம்பரம், காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய மாநகராட்சிகளை சேர்ந்த 10 பெண் மேயர்கள், நாகர்கோவில், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சி, சேலம், சிவகாசியை சேர்ந்த 6 துணை மேயர்கள் மற்றும் உள்ளாட்சி துறை பெண் தலைவர்கள் மற்றும் பெண் துணைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.