கோவாவில்: பா.ஜ.க.வில் இணைந்த 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்

கோவாவில் காங்கிரசை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இன்று இணைந்துள்ளனர்.

கோவாவில் முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்து வரும் காங்கிரஸ் கட்சியில் உள்ள 8 எம்.எல்.ஏ.க்கள் இன்று கோவா முதல்-மந்திரியை நேரில் சென்று சந்தித்து பேசினர். அவர்களில் முன்னாள் முதல்-மந்திரி திகம்பர் காமத், எதிர்க்கட்சி தலைவர் மைக்கேல் லோபா ஆகியோரும் அடங்குவர். அவர்கள் தவிர, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான தெலிலா லோபோ, ராஜேஷ் பல்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்சோ செகீரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோரும் கோவா முதல்-மந்திரியை சந்தித்தனர். இதன்பின்னர், காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடத்தி ஆலோசனை செய்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய மைக்கேல் லோபோ, நாங்கள் பா.ஜ.க.வில் இணைந்து விட்டோம். பிரதமர் மோடி மற்றும் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் கரங்களை வலுப்படுத்த போகிறோம் என கூறியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசை எதிர்கொள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ள தருணத்தில், இந்நடவடிக்கையை காங்கிரசார் எடுத்து உள்ளனர்.