கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் பிழையே காரணம்: விசாரணை அறிக்கை வெளியீடு

கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2020-ல் நிகழ்ந்த விமான விபத்துக்கு விமானி பிழையே காரணம் என்று இறுதிகட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கொரோனா காலக்கட்டத்தில் துபாயில் சிக்கி தவித்த 190 இந்தியர்களுடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி ஏர் இந்தியா விமானம் கிளம்பியது. கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையம் நோக்கி வந்த போது இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. டேபிள் டாக் ரன்வே என்றதால், விமானத்தை தரையிறக்க முடியாமல் வானில் வட்டமிட்டு விமானி இறுதியாக விமானத்தை தரையிறக்கிய போது, ஓடுதளத்தில் இருந்து விலகி சென்று கோர விபத்து ஏற்பட்டது. இதில் விமானி உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இது தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை விமான விபத்து விசாரணை புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை விமானி பின்பற்றாததே விபத்துக்கு காரணம். விமானத்தை அருகில் உள்ள விமான நிலையத்திற்கு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தும் விமானி அதை செய்யவில்லை என கூறப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறும் இந்த விபத்து ஏற்பட ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை புறக்கணித்துவிட முடியாது என்பதையும் தெரிவித்துள்ளது.