கொரோனா 3-வது அலை : முககவசத்தை பொதுமக்கள் தவறாமல் அணிய வேண்டும் – சுகாதாரத்துறை

கொரோனா 3-வது அலையை தடுக்க பொதுமக்கள் முககவசத்தை தவறாமல் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை ஏப்ரல், மே மாதங்களில் கடுமையாக இருந்த நிலையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்தநிலையில், நகர் பகுதியில் இருப்பவர்களை காட்டிலும் புறநகர் பகுதியில் இருப்பவர்கள் சரிவர முககவசம் அணிவதில்லை என புகார் எழுந்துள்ளது.

மதுரையில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பே காரணம். ஆனால், தற்போது ஒரு சிலர் தடுப்பூசி போட்டதால் மீண்டும் கொரோனா வராது என நினைத்து அலட்சியமாக இருக்கிறார்கள். அவர்கள் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். இது பேராபத்தில் முடியும் என்பதை உணர வேண்டும்.

பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் அவசியத்தை வெளிகாட்டும் வகையில் நகர் மற்றும் புறநகர் பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல், காவல்துறை சார்பில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.