கொரோனா காலத்திலும் ஆசிரியர்களின் பணியை உலகம் நன்கு அறியும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை புகழாரம்

“கொரோனா காலத்திலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த பணியை உலகம் நன்கு அறியும்” என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ”ஆசிரியர்களை பெற்றோர்களுக்கு இணையாக வைத்து போற்றுகிறது நமது இந்தியப் பண்பாடு. அத்தகைய உயர்வான ஆசிரியர்களை போற்றி கௌரவிக்கும் விதமாகவே ஆண்டுதோறும் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு நல்ல ஆசிரியர், மாணவர்களுக்கு கல்வி அறிவைத் தருவதோடு சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்கிறார். ஒரு மாணவரை நல்ல கல்வியாளராக, அறிஞராக, சிந்தனையாளராக, பண்பும் – ஆற்றலும் உடையவராக உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. கரோனா போன்ற சவாலான பெருந்தொற்றுக் காலத்திலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த பணியை உலகம் நன்கு அறியும்.

மாணவர்களுக்கு கல்வியையும் பண்பையும் கற்பிக்கும் ஆசிரியர்கள், வருங்கால இந்தியாவை வல்லரசாக மாற்றும் விதமாக மாணவ சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட வேண்டும். சமுதாய வளர்ச்சிக்காக அரும்பணி ஆற்றிவரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.