கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு விழா

கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசளிப்பு விழா மிகச்சிறப்பாக நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு நிறுவங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். திருவரங்குளம் வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் ரமா.ராமநாதன், துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் தொழுநோய் அலுவலக மேற்பார்வையாளர் சி.கோடீஸ்வரன், வல்லத்திராக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் நிகிதா தேவி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் என்.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் (தொழுநோய்) அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் எம்.இராஜசேகர பாண்டியன் கலந்து கொண்டு கட்டுரை, வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியது; தொழுநோய் வெளிறிய அல்லது சிவந்து காணப்படும். உணர்ச்சியற்ற தேமலாகத்தான் முதலில் வெளிப்படும். ஆரம்ப நிலையிலே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் உடல் ஊனம் ஏற்படாமல் தடுக்க முடியும். தொழுநோய் பரவும் விகிதம் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது. பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு மட்டுமே தொழுநோய் அறிகுறிகள் காணப்படுகிறது. வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் தொழுநோயை ஒழிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. காற்றின் மூலம் தொழுநோய்க்கிருமி பரவுகிறது. ஐந்தாண்டுகளோ அல்லது ஏழு ஆண்டுகளோ கழித்து அது நோயாக மனிதர்களுக்கு வெளிப்படுகிறது. தொழுநோய்க்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத காரணத்தால் முறையான கூட்டுமருந்து சிகிச்சை மட்டுமே தொழுநோயை முழுமையாகக் குணபடுத்துகிறது. எனவே அறிகுறிகள் கண்டறியப்பட்டால் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று உரிய சிகிச்சை பெற வேண்டும. என்றார்.

விழாவில் சுகாதார ஆய்வாளர்கள் சந்திரன், சரவணன், சரவணக்குமார், பிரகாஷ் மற்றும பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.சந்திரமோகன் வரவேற்றார் முடிவில் உதவிப்பேராசிரியர் வி.ரமேஷ் நன்றி கூறினார்.