குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நீக்கத்தை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த சரஸ்வதி என்பவரையும், உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் ஆகியோரையும் நீக்கி 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்களை வரவேற்க ஆணையத்தின் செயலாளருக்கு அனுமதி அளிக்கப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி மற்றும் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்ட மூன்று உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல்குத்தூஸ், “ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்குவதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்” எனக் கூறி அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜி ரவீந்திரன் , “ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான குழந்தைகள் உரிமை சட்டப்பிரிவையும், அப்பதவிகளில் இருந்து நீக்குவது தொடர்பான சட்டப்பிரிவையும் கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே, தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.