குடந்தையில் காவி உடை, விபூதி உடனான அம்பேத்கர் போஸ்டர்களால் திடீர் பரபரப்பு!

அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு பல்வேறு அமைப்பினர் அவரது உருவச் சிலைக்கும், படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளரான குருமூர்த்தி என்பவர் அம்பேத்கர் படத்தில் காவி உடை அணிவித்து, விபூதி பூசியும், குங்குமம் வைத்தும், கும்பகோணம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியதாக கூறப்படுகிறது. இதையறிந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்த கட்சியினர் உடனடியாக போஸ்டர்களை அகற்றாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என போலீசாருக்கு தகவல் அளித்தை அடுத்து, போலீசார் மாற்று உடையில் வந்து போஸ்டரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து கும்பகோணத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையில் போஸ்டர் ஒட்டிய இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் குரு மூர்த்தியை வீட்டுக்காவலில் போலீசார் வைத்துள்ளனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு  ஏற்பட்டுள்ளது.