குஜராத்தில் வெற்றி பெற்றால் பழைய ஓய்வூதிய திட்டத்தை காங்கிரஸ் அமல்படுத்தும் ராகுல் காந்தி உறுதி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை காங்கிரஸ் அமல்படுத்தும் என்று அக்கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் ஓய்வு பெறும் அரசு ஊழியர்கள் வயதான காலத்தில் பிறரை சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டிற்கு வலிமை சேர்க்கும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பெறுவதற்கு உரிமை உண்டு என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை காங்கிரஸ் அமல்படுத்தும் என உறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். குஜராத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் சமீபத்தில் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், காங்கிரஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தியாக வேண்டும். கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் பாஜக 49.05 சதவீத வாக்குகளையும் 99 தொகுதிகளையும் கைப்பற்றி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 41.44 சதவீத வாக்குகளும் 77 சட்டப்பேரவைத் தொகுதிகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது.