கீரமங்கலத்தில் பள்ளி செல்லா  குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி அளித்த அறிவொளி நகர் கிராம மக்கள்

 புதுக்கோட்டை மாவட்டம் ,கீரமங்கலம் வடக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மேலாண்மைக்குழு  கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் கலந்து கொண்ட திருவரங்குளம் வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரனிடம் அறிவொளி நகர் குழந்தைகள் பள்ளிக்கு வருவது  குறைந்து வருவது பற்றிய தகவல் கூறப்பட்டது. 

இதனையடுத்து ஒருங்கிணைந்த பள்ளிகல்வி திட்ட அலுவலர் தங்கமணி, வட்டாரக் கல்வி அலுவலர் கருணாகரன், இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் துரைப்பாண்டியன், பெற்றோர் ஆசிரியர்கழகத் தலைவர் ராம்குமார் மற்றும் மேலாண்மைக்குழுத் தலைவி கவிதா,சேந்தன்குடி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மரம் தங்கக்கண்ணன் உள்ளிட்டோர் அறிவொளி நகருக்கு சென்று ஆய்வு செய்த போது சுமார் 32 குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு பள்ளி செல்லவில்லை என்பதை கண்டறிந்தனர்.

பின்னர்  பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளிடம் கருத்து கேட்டனர் அப்போது சாலையை கடந்து செல்வது அச்சமாக உள்ளதால் பல குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என பெற்றோர்கள் கூறினார்கள், அதனையடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்திய போது குழந்தைகள் அனைவரும் பள்ளி செல்வதாக கூறினார்கள், உடனே அறிவொளி நகர் குழந்தைகள் பள்ளிக்கு சென்று வர பெற்றோர் ஆசிரியர்கழகம், பள்ளி மேலாண்மைக்குழு மூலம் வாகன வசதி ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். பெற்றோர்களும்  பள்ளி வயது குழந்தைகளை  பள்ளிக்கு அனுப்புவதாக உறுதி கூறினார்கள்.