கீரனுாரில் சமுதாய வளைகாப்பு விழா கோலாகலம்

கீரனூர் சொர்ண விலாஸ் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு விழா இன்று (18ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நித்யவதி வரவேற்று பேசினார். இதில், கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ., சின்னத்துரை, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க., செயலாளர் ‌செல்லபாண்டியன் முன்னிலையில், ஒன்றிய கவுன்சிலர், ஒன்றிய சேர்மன், கீரனூர் பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர், குன்றாண்டார் கோவில் வட்டார மருத்துவ அலுவலர் ஆகியோர்  கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு போடும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

வளைகாப்பு விழாவில், 300க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு அணிவிக்கப்பட்டு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில், அனைவருக்கும் ஐந்து வகையான கலவை சாப்பாடுகள் பரிமாறப்பட்டது.

விழாவில் ஏற்பாடு செய்திருந்த ஊட்டச்சத்து கண்காட்சியில் கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்து மிக்க உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது. மேற்பார்வையாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மேற்பார்வையாளர் சாந்தி நன்றி தெரிவித்து பேசினார்.