கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் விராட்கோலியே நீடிப்பார்: கிரிக்கெட் வாரியம்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி, விரைவில்  விலக  உள்ளதாக வெளியான தகவல் குறித்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் விராட் கோலி இத்தகைய முடிவு எடுக்க இருப்பதாக பிரபல ஆங்கில நாளிதழ்  ஒன்று செய்தி வெளியிட்டு இருந்தது. ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது.

அக்டோபர் -நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது  பதவி விலகல் முடிவை விராட் கோலி அறிவிக்க இருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வதந்தியை இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. பிசிசிஐயின் பொருளாளர் அருண் துமால், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இவையெல்லாம் அபத்தமானவை. அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. டெஸ்ட் மற்றும் ஒருநாள்,20 ஓவர்  அணிகளுக்குத் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியம்  விவாதிக்கவில்லை. எல்லாவிதமான போட்டிகளிலும் விராட் கோலியே கேப்டனாக நீடிப்பார் என்று விளக்கம் அளித்துள்ளார்.