கிராம ஊராட்சி மகளிர் வார்டு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் புத்தாக்க பயிற்சி

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் கிராம ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர்களுக்கான இரண்டு நாள் புத்தாக்க பயிற்சியினை வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு (கிராம ஊராட்சி) தொடங்கிவைத்தார்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் முன்னிலை வகித்தார். பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற பெண் வார்டு உறுப்பினர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் சின்னையா சான்றுகளை வழங்கினார். பட்டுக்கோட்டை மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் முதல்வரின் உத்தரவுப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு  உட்படட்ட 497 கிராம ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்கள் புத்தாக்கப்பயிற்சி அணிவாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 27 கிராம ஊராட்சி பெண் வார்டு உறுப்பினர்களுக்கு அணி வாரியாக புதுக்கோட்டை ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் பயிற்சியில் முதல் அணியில் 7 கிராம ஊராட்சிகளை சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சிகள் நடைபெற்றன.

இந்த பயிற்சியில் தமிழ்நாட்டில் ஊராட்சி நிர்வாக அமைப்புகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளாக பெண்கள் பங்கேற்பு, உள்ளாட்சி நிர்வாகத்தில் மகளிர் பங்கு, பாலின சமத்துவம், அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் பெண்களுக்கான உரிமைகள், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம்-1989. மத்திய, மாநில அரசு திட்டங்களில் மகளிர்க்கான சிறப்பு ஒதுக்கீடு, நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் அளவில் அடைதல் ஆகிய தலைப்பின் கீழ் பயிற்றுநர்கள் சைவராசு மற்றும் மகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பயிற்சியளித்தனர்.