
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், காவேரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்தின்கீழ், மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்திற்காக விராலிமலை, குளத்தூர் மற்றும் புதுக்கோட்டை தாலுகாக்களுக்குட்பட்ட 21 கிராமங்களில் 474.83 ஹெக்டேர் பட்டா நிலங்களை கையகப்படுத்தவும், 150.60 ஹெக்டேர் அரசு புறம்போக்கு நிலங்களை நிலமாற்றம் செய்யப்படவுள்ளது.
மேற்காண்ட திட்டத்திற்காக 19 கிராமங்களில் நில அளவை பணிகள் முடிவுற்று முதல்நிலை அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்காக நிலம் கையகம் படுத்துதலில் நியாயமான சரியீடு மற்றும் ஒளிவு மறைவின்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு உரிமைச்சட்டம் 2013 (மத்திய சட்டம் 30/2013)-ன் படியும் மற்றும் தனி நபர் பேச்சுவார்த்தை மூலமும் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக தனிநபர் பேச்சுவார்த்தை மூலம் குன்னத்தூர், புலியூர், வத்தனாகுறிச்சி, வாலியம்பட்டி, சீமானூர் மற்றும் பூங்குடி ஆகிய வருவாய் கிராமங்களில் இதுவரை 6 கட்டங்களாக 43.19 ஹெக்டேர் நிலங்கள் ரூ.44.15 கோடி மதிப்பிற்கு கையகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விராலிமலை தாலுகா, குன்னத்தூர் கிராமத்தில் நீர்வளத்துறை மூலம் கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
விராலிமலை தாலுகா குன்னத்தூர், குளத்தூர் தாலுகா புலியூர் மற்றும் வத்தனாக்குறிச்சி கிராமங்களில் நிலமெடுப்பு செய்வதினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இடமாற்றம் செய்யப்படவுள்ள 25 குடும்பங்கள் ஆகியவற்றிற்கான மறுவாழ்விற்காக, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு திட்ட நிருவாகி /இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரால் திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, கருத்துக் கேட்புக்கூட்டம் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியரால் சமர்பிக்கப்பட்ட மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்விற்கான இறுதி திட்ட வரைவு அறிக்கையினை பரிசீலனை செய்து மாநில மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு ஆணையர் / நில நிர்வாக ஆணையர், சென்னை ஒப்புதலுக்கு அனுப்பும் பொருட்டு மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது.
மேலும் மேற்கண்ட காவேரி வைகை குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது என திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை, மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் காவேரி-வைகை-குண்டாறு ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் த.ஜெயலட்சுமி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.