
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபுவிடம் கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவர் தான் நடத்தி வரும் நவாப் சீரகசம்பா அரிசி கம்பெனியின் பெயரை வைத்து திருச்சி மாவட்டத்தில் போலியாக சாக்கு மூட்டைகள் தயாரித்து அதில் தரமற்ற அரிசி மூட்டைகளை விற்பனை செய்வதாக புகார் அளித்தார்.
அதனடிப்படையில் திருச்சி மாநகர் பகுதிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட், பாலக்கரை, பகுதிகளில் உள்ள கடைகளிலும் மற்றும் விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள அரிசி குடோன்கள் உள்ளிட்ட 16 இடங்களில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நவாப் சீரகசம்பா அரிசி கம்பெனியின் பெயரில் போலி சாக்கு மூட்டைகள் தயாரித்து அதில் தரமற்ற அரிசி விற்பனை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து குடோன் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் கிலோ எடை கொண்ட பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான தரமற்ற அரிசி கைப்பற்றப்பட்டது.
மேலும் குடோனில் உள்ள அரிசியின் தரத்தை தெரிந்து கொள்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி சாக்கு மூட்டைகளில் இருந்த மாதிரி அரிசியினை பரிசோதனை ஆய்வுக்காக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சேகரித்து கொண்டனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில்:- புகாரின் அடிப்படையில் திருச்சி விஸ்வாஸ் நகர் பகுதியில் உள்ள அரிசி குடோன்களில் உள்ளே போலி சாக்குமூட்டையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 ஆயிரம் கிலோ தரமற்ற அரிசியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நவாப் பெயரில் போலியாக அச்சிடப்பட்ட சாக்கு மூட்டைகளையும் பறிமுதல் செய்துள்ளோம் என்றார்.