காசா அருகே அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ: 21 பேர் பரிதாப பலி

பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் தீ கொளுந்துவிட்டு எரிந்தது. கரும்புகை வெளியேறியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இந்நிலையில், தீவிபத்தில் குடியிருப்பில் வசித்தவர்கள் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 7 குழந்தைகளும் அடங்குவர். அவர்களது உடல்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர். உயிரிழந்தவர்களின் முழு விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

தீ விபத்து குறித்து தகவலறிந்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என தெரிவித்தார். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு 21 பேர் பலியான சம்பவம் காசா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.