கல்வித்துறையில் மோடி அரசு தோற்றுவிட்டது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம்

கல்வித்துறையில் மோடி தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் வெளியான 2022ம் ஆண்டுக்கான கல்விநிலையின் அறிக்கையை சுட்டிக்காட்டி இந்த குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கல்விநிலை குறித்த மோடி அரசின் ரிபோர்ட் அட்டையும் “எஃப்” பெறுகிறது. எஃப் என்றால் ஃபெயில் என்று தெரிவித்துள்ளார். மேலும் அதில் சமீபத்திய கல்விநிலை குறித்த ஆண்டு அறிக்கை (ASER 2022) செய்தியை சுட்டிக்காட்டி உள்ளார். அதன்படி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் இரண்டாம் வகுப்பு பாடபுத்தக்தை வாசிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 2018ம் ஆண்டு 27.3 சதவீதமாக இருந்தது. அது, 2022ல் 20 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், 5ம் வகுப்பு படிக்கக்கும் மாணவர்களில் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை வாசிக்ககூடியவர்களின் எண்ணிக்கையும் 2018ம் ஆண்டு இருந்த 50.5 சதவீதத்தில் இருந்து 2022ல் 42.8 சதவீதமாக குறைந்துள்ளது.

முன்னதாக, 30 லட்சம் காலிபணியிடங்கள் உள்ள நிலையில், புதிதாக வேலைக்குச் சேர்ந்த 71,000 பணிநியமனக் கடிதங்களை வழங்கியதற்காக மோடியை கடுமையாக குற்றம்சாட்டினார். அதுகுறித்து இந்தியில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” நரேந்திர மோடி ஜி, அரசுத்துறைகளில் 30 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. இன்று நீங்கள் வழங்கியிருக்கும் 71 ஆயிரம் பணிகளுக்கான பணிநியமன ஆணை கடலில் கலந்த சிறுதுளியைப் போன்றதே. இது காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான ஒரு செயல்பாடு மட்டுமே. நீங்கள் ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று சொல்லி இருந்தீர்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் 16 கோடி வேலைவாய்ப்புகள் எங்கே என்று இளைஞர்களுக்குச் சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.