கலைநிகழ்ச்சிகள் கலைத்திருவிழாபுதுகையில் முன்னேற்பாடு கூட்டம்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் கலைத்திருவிழா என்னும் பெயரில் பள்ளி அளவில் வருகிற 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அரசு நடுநிலைப்பள்ளிகளில் போட்டியினை சிறப்பாக நடத்துவது சம்பந்தமான முன்னேற்பாடு கூட்டம் முதன்மைக்கல்வி அலுவலகம் அருகில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன் பேசியதாவது: கலைத்திருவிழா போட்டியானது அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பிரிவு 1 ஆகவும், 9 மற்றும் 10ம் வகுப்புக்கு பிரிவு 2ஆகவும், 11 மற்றும் 12ம் வகுப்புக்கு பிரிவு 3ஆகவும் அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையில் வருகிற 23ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்தப்படவேண்டும். மாவட்ட அளவில் தேர்வானவர்கள் வருகிற ஜனவரி 3ம் தேதி முதல் 9ம் தேதி வரை மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.