கறம்பக்குடி அருகே ஸ்ரீபிடாரியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா

கறம்பக்குடி அருகே மீனம்பட்டியில் நடைபெற்ற ஸ்ரீ பிடாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா 1000கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா  வலங்கொண்டான் விடுதி ஊராட்சியை  சேர்ந்த மீனம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பிடாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் திருப்பணி வேலைகள் நடைபெற்று  இன்று   கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக  மூன்று நாட்களுக்கு முன் யாகசாலைகள் அமைக்கப்பட்டு விக்னேஷ்வர பூஜை  கணபதி ஹோமம், லெட்சுமி ஹோமம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கங்கை காவிரி உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை குடங்களில் வைத்து சிவாச்சாரியார்கள்  யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதைத் தொடர்ந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் மேளதாளங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோயிலை சுற்றி வலம் வர குதிரை யானை நடனமிட கருட பகவான் வானில் வட்டமிட சிவாச்சாரியார்கள் மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனித நீரானது ஊற்றப்பட்டு பின் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், கோயில் நிர்வாகத்தினர், கிராம பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.  மழையூர் காவல் உதவி ஆய்வாளர் மாரியதாஸ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.