கறம்பக்குடி அருகே மின்கம்பத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை – பொதுமக்கள் அதிர்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா செங்கமேடு ஊராட்சி இன்னான் விடுதி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இந்த பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் உள்ளது.

பொதுமக்களும் மாணவா்களும் இந்த பாதையை பயன்படுத்தி வந்தனா், மண்  பாதையாக இருந்த இந்த சாலையை தரம் உயர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிமெண்ட் சாலையாக போடப்பட்டுள்ளது. ஆனால் சாலையின் நடுவே உள்ள மின் கம்பம் அகற்றப்படாமல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதால் பள்ளி மற்றும் வீடுகளுக்கு செல்லும் ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையிலே நின்று விடுவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

மேலும் பள்ளிக்கு தேவையான உணவுப் பொருட்களைக் கொண்டு வரும் வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்கம்பம் சாலையின் நடுவே உள்ளதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு மின் கம்பத்தை அகற்றி மாற்று இடத்தில் அமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.