கறம்பக்குடி அருகே அரசு  கல்லூரியில்  பேராசிரியா்களை நியமிக்க கோரி மாணவா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

கறம்பக்குடி அருகே மருதன்கோன் விடுதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களை நியமிக்க வலியுறுத்தியும் வேதியியல் இயற்பியல் பாடப்பிரிவுகளுக்கு ஒரு பேராசிரியர் கூட இல்லாததாலும் முறையான ஆய்வகம், ஆய்வக பயிற்றுநர்கள் இல்லாததால் மாணவர்கள் பாடம் கற்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி அக்கல்லூரியில் படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து வகுப்பு புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே  மருதன்கோன்விடுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர், இந்நிலையில் இந்த கல்லூரியில் 49 பேராசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற நிலையில் இரண்டு பேராசிரியர்கள் மட்டுமே நிரந்தரமாகவும், மேலும் 17 பேராசிரியர்கள் தற்காலிகமாகவும் என மொத்தம் 19 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் போதிய அளவு பேராசிரியர்களை நியமிக்க வலியுறுத்தியும் இயற்பியல், வேதியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முழுமையாக எந்த பேராசிரியர்களும் இல்லாததாலும் ஆய்வக பயிற்றுநர்கள், ஆய்வகம் முறையாக இல்லாததாலும் கல்லூரியில் படிக்கக்கூடிய மாணவர்கள் கல்வி பயில்வதில் சிரமம் இருப்பதாகவும் இதனால் உடனடியாக மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற கோரி அக்கல்லூரியில் படிக்கும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணிப்பு செய்து கல்லூரி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வரும் 15 தினங்களுக்குள் மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.