கர்நாடகாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது ; என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாக கடந்த நவம்பர் 4-ம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது.

இதுகுறித்து பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிமோகா, ஹாவேரி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது ஷிமோகாவை சேர்ந்த சையத் யாசின், மாஸ் முனீர் உள்ளிட்ட 4 பேர் சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த 4 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் ஷிமோகாவில் கைது செய்தனர். கைதான மாஸ் முனீர், சையத் யாசின் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது ஷிமோகா, மங்களூரு, ஹாவேரி ஆகிய இடங்களில் முகாமிட்டு 30 வயதுக்கும்குறைவான இளைஞர்களை ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தக்ஷின கன்னடா, ஹாவேரி ஆகிய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிகாலையில் திடீர் சோதனை நடத்தினர். அதில் தக்ஷின கன்னடாவை சேர்ந்த மசீம் அப்துல் ரஹ்மான், ஹாவேரியை சேர்ந்த நதீம் அஹமது ஆகிய இருவரும் சிக்கினர். இந்த 2 பேரும் சமூக வலைதளங்கள் மூலம் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மசீம் அப்துல் ரஹ்மான் ஷிமோகாவில் கைது செய்யப்பட்ட சையத் யாசினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அவரது வழிகாட்டுதலின்படி மங்களூருவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஹாவேரியை சேர்ந்த நதீம் அஹமது, மாஸ் முனீருடன் தொடர்பில் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களில் 5 முறை மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்குள்ள ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்களை சந்தித்ததாக என்ஐஏ அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த ஐ.எஸ்.ஆதரவு தீவிரவாதிகள் பிரபலங்களை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) தகவல்கிடைத்தது. இதன்பேரில் கடந்த2020-ம் ஆண்டு டெல்லி விமானநிலையத்தில் முகமது என்பவர்கைது செய்யப்பட்டார். கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.