
‘கரோனா தொற்று காலத்தில் நீதிபதிகள் உயிரை துச்சமாக கருதி பணிபுரிந்தனர்’ என உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் பணியிலிருந்து ஓய்வு பெற உள்ளார். இதையொட்டி அவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில் நீதிபதி பி.என்.பிரகாஷ் பேசியதாவது: மதுரை நீதிமன்றத்தில் நடந்து வந்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 2000-ம் ஆண்டில் சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டேன். அந்த வழக்கில் குற்றவாளிகள் வலுவான பின்னணி உள்ளவர்களாக இருந்ததால் சாட்சிகள் பலர் பிறழ்சாட்சியாக மாறினர். வழக்கின் போக்கு அரசு தரப்புக்கு எதிராக சென்று கொண்டிருந்தது.
இதனால் பெரும் குழப்பம் அடைந்த நான், மீனாட்சியம்மன் கோயிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டேன். அதன்பிறகு வழக்கின் போக்கு திசை திரும்பி, குற்றவாளிகள் இருவருக்கு தலா 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மதுரையில் பாண்டிய மன்னர்கள் சொக்கநாதரின் வழிகாட்டுதலால் நீதி வழுவாமல் ஆட்சி புரிந்தனர். இத்தனை பெருமை மிக்க மதுரையில் நீதியை ஒருபோதும் தவறவிடக் கூடாது. நீதிபதியாக பணிபுரிந்த போது எனக்குள் சொக்கநாதர் இருந்து தீர்ப்புகளை வழங்க வேண்டும் என வேண்டிக்கொள்வேன். எனக்கு சக நீதிபதிகள் நல்ல ஒத்துழைப்பு வழங்கினர். கரோனா தொற்று காலத்தில் உயிரை துச்சமாக கருதி நீதிபதிகள் பணிபுரிந்தனர்.
மதுரை நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு 3 பேர் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகள் கீழமை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீட்டில் அவர்களுக்கு தண்டனை வழங்கியது, சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றியதுடன், வழக்கின் விசாரணையை தொடர்ந்து கண்காணித்தது ஆகியன சந்தர்ப்பத்தின் மூலம் கிடைத்த வாய்ப்புகள்” என்று நீதிபதி பேசினார். விழாவில் எம்எம்எச்ஏ தலைவர் எஸ்.ஸ்ரீனிவாசராகவன் வரவேற்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன், எம்பிஎச்ஏஏ தலைவர் பி.ஆண்டிராஜ், எம்ஏஎச்ஏஏ தலைவர் வி.ராமகிருஷ்ணன், எம்பிஏ செயலாளர் ஆர்.வெங்கடேசன் ஆகியோர் பேசினர்.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், புகழேந்தி, ஜெகதீஷ்சந்திரா, விஜயகுமார், குமரேஷ்பாபு, அரசு பிளீடர் திலக்குமார், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கே.பி.நாராயணகுமார், கே.பி.கிருஷ்ணதாஸ், டி.அன்பரசு, பி.கிருஷ்ணவேணி, வி.எஸ்.கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர். பெண் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெ.ஆனந்தவள்ளி நன்றி கூறினார்.