தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் கட்சியை பலப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க., நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் பால் விலை உயர்வைக் கண்டித்து நவ.15-ல் பா.ஜ.க., சார்பில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அதிக அளவில் ஆட்களை திரட்டி போராட்டம் நடத்திய வட்டாரத் தலைவர்களுக்கு அண்ணாமலை பாராட்டுத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பா.ஜ.க., நிர்வாகிகளுடன் கான்பரன்ஸ் காலில் அண்ணாமலை பேசியதாவது:
பால் விலை உயர்வைக் கண்டித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் பேசப்படும் போராட்டமாக மாறியுள்ளது. ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்டத் தலைவர்கள் அறிக்கை அனுப்பியுள்ளனர். சென்னைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை சிறப்பாக இருந்தது. பிரதமரும், அமித்ஷாவும் கட்சி வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். அமைப்பு ரதியாக கட்சியை இன்னும் கட்சியை பலப்படுத்த வேண்டும் என பிரதமரும், அமித்ஷாவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் அடுத்த ஓராண்டுக்கு கட்சியை ஒன்றிய அளவில் பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டும். இதை செய்தால் கட்சி மிகப்பெரிய வளர்ச்சியை எட்டும். இதை ஒரு சபதமாக எடுத்து நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.