‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு அதிமுக ஆதரவு சட்ட ஆணையத்துக்கு இபிஎஸ் கடிதம்

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சட்ட ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையால் பழனிசாமி – பன்னீர்செல்வம் தரப்பினர், தனித்தனியே மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து செயல்பட்டு வருகின்றனர். பழனிசாமி நடத்திய பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இடைக்காலப் பொதுச் செயலாளர் நியமனம் உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் பழனிசாமி தரப்பினர் தெரிவித்துவிட்டனர். இதை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பும் மனு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் எந்த முடிவையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இந்நிலையில், மத்திய சட்ட ஆணையம் `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவின் பொதுச் செயலாளர் என்று குறிப்பிடப்பட்டு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை காட்டி, அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக பழனிசாமியை மத்திய சட்ட ஆணையம் அங்கீகரித்துள்ளதாக அவரது தரப்பினர் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறைக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அளித்து கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.