
நெல்லையில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, வேளாண் அணி மாநில தலைவர் சேக் அப்துல்லா, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, துணைத் தலைவர் ஹயாத், பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.கனி, மாவட்ட செயலாளர்கள் முஸ்தபா, பர்கிட் அலாவுதீன், அன்வர்ஷா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வழ.ஆரிப் பாஷா, மின்னதுல்லா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்ததாவது;
1. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் உள்ள இருக்கன்துறையில் ஏற்கனவே 2 கல்குவாரிகள் உள்ள நிலையில் புதிதாக 3 புதிய கல்குவாரிகளை அமைப்பதற்கு ஹைடெக் ராக் புராடக்ட்ஸ் & அக்ரிகேட்ஸ் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் அனுமதி கேட்டுள்ளது. கூடன்குளம் அணுஉலை கட்டுமானப் பணிகளின் தேவைக்காக இந்த குவாரிகளை அமைக்க விருப்பதாகவும், எஞ்சியவற்றை அருகில் உள்ள நுகர்வோர்களுக்கு வழங்குவதாகவும் கூறி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளை அந்நிறுவனம் தாக்கல் செய்துள்ளது. வழக்கம்போல் வேலைவாய்ப்பு, மரங்கள் வளர்ப்பு, மேம்பாட்டுத்திட்டங்கள் என்கிற கவர்ச்சிகரமான அறிவிப்புடன் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த குவாரிகள் அமையவிருக்கும் இடம் அணு உலையிலிருந்து 5 கி.மீட்டர் சுற்றளவிற்குள்ளும், சுமார் 190 அடி ஆழத்திற்கும் அமைய உள்ளதால் அதனால் ஏற்படும் அதிர்வுகளால் அணு உலைகளுக்கு ஏதேனும் சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது மிகப்பெரும் அழிவை ஏற்படுத்திவிடும் என்பதால் இதற்கு ஒருபோதும் தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது.
நெல்லை மாவட்டத்தில் தற்போது இயக்கத்தில் உள்ள 54 கல் குவாரிகளும் முறைகேடாக இயங்குகிறது என்று, அரசு அமைத்த ஆய்வு குழுக்கள் ஆதாரபூர்வமாக நேரில் கண்டறிந்து அறிவித்துள்ளது. அதில் 19 குவாரிகள் இயங்கவே தகுதி இல்லாதது என்றும், மற்ற குவாரிகளுக்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இருக்கன்துறையில் புதிதாக 3 கல்குவாரிகளை அமைக்க குஜராத் முதலாளிகளைக் கொண்ட தனியார் நிறுவனம் முயன்றுவருகின்றது. கூடங்குளம் அணு உலை கட்டுமானப் பணி என்பதைத் தாண்டி இதன் பின்னணியில் மிகப்பெரும் கனிமவள கொள்ளை உள்ளதோ என்கிற ஐயம் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் அமையும் விழிஞ்சியம் துறைமுகத்துக்கு தேவையான கற்கள் அனைத்தும் தமிழகத்தின் இயற்கை வளங்களை அழித்தே கொண்டு செல்லப்படுகின்றது. தற்போது இருக்கன்துறையில் திட்டமிடப்பட்டுள்ள குவாரியின் செயல்பாடும் அண்டை மாநிலங்களின் தேவையை பூர்த்தி செய்வதே என்கிற குற்றச்சாட்டும் எழுகிறது.
ஏற்கனவே, மக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட அணு உலை பூங்கா காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தின் பிடியில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக, கனிம வளங்களை கொள்ளைக்கு வழிவகுக்கும், சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கல்குவாரிகளை அமைக்க அனுமதிப்பது ஏற்புடையதல்ல, ஆகவே, இருக்கன்துறையில் அனுமதி கோரப்பட்டுள்ள 3 கல்குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
2.தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் உரைநிகழ்த்திய மாண்புமிகு தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி அவர்களின் மரபை மீறிய, சட்டமன்ற ஜனநாயகத்தை மீறிய செயல் கண்டனத்திற்குரியது.
ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றக்கூடிய உரை என்பது ஆளும் அரசின் கொள்கையை எடுத்துச் சொல்லக்கூடிய உரையாகும். அந்த உரையில் ஆளுநர் தனது சொந்த விறுப்பு, வெறுப்புகளை காட்டக்கூடாது என்பது மரபு. ஆனால், அரசியல் சாசன விதிகளுக்கு முரணாக தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவி அவர்கள் அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக, சிலவற்றை வேண்டுமென்றே விடுத்தும், சிலவற்றை தானாகவே சேர்த்தும் உரை நிகழ்த்தியுள்ளார். இதன்மூலம் மரபை மீறி தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசையும், அரசை தேர்ந்தெடுத்த தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார்.அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடக்கக்கூடிய நடவடிக்கைகளில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆளுநரே இதுபோன்று நடந்து கொள்வது அரசியல் மாண்புகளுக்கு எதிரானது.
ஆளுநரின் நடவடிக்கை என்பது அரசியல் சாசனப்படியும், வரம்பு மீறாமலும், கூட்டாட்சி தத்துவத்தை மீறாத வகையிலும், மாநிலத்தின் சுயாட்சிக்கு கேடு விளைவிக்காத வகையிலும் அமைய வேண்டும். ஆனால், இத்தகைய நடைமுறைகளை மீறும் வகையிலேயே தமிழக ஆளுநரின் தொடச்சியான செயல்பாடுகள் அமைந்துள்ளன.
அதேபோல் நேற்று ஆளுநர் மாளிகையில் ஐ.ஏ.எஸ். பயிலும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒன்றிய அரசின் பக்கம் தான் நிற்க வேண்டும். அவர்கள் தான் உங்களை பணிக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று, கூட்டாட்சிக்கு விரோதமாக நிர்வாக ரீதியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உரை நிகழ்த்தியுள்ளார். மட்டுமின்றி ஆளுநர் மாளிகையின் பொங்கல் விழா அழைப்பிதழில் இருந்து தமிழ்நாடு என்கிற வார்த்தையையும், தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இலச்சினையும் நீக்கப்பட்டுள்ளது. இதனை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
ஒரு மாநில அரசின் தலைவர் என்கிற நிலையில் உள்ள ஆளுநர் பொறுப்பில் இருந்துகொண்டு கூட்டாட்சிக்கு விரோதமாக இவ்வாறு பேசுவது என்பது சட்டவிரோதமானது.
ஆகவே, ஆளுநர் என்கிற பதவியின் தகுதிக்கு பொருந்தாத தமிழக ஆளுநரை, பதவியிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் வெளியேற்ற வேண்டும். தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் கொள்கைக்கும், தமிழர் நலனுக்கும் விரோதமாகவும் செயல்படும் தமிழக ஆளுநர் ஆா்.என்.ரவியை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். தமிழக ஆளுநரின் தொடரும் இத்தகைய அரசியலைமைப்பு விரோத போக்கை கண்டித்தும், ஆளுநரை தமிழகத்திலிருந்து வெளியேற்றக் கோரியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
3.புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னவாசல் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமம் அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தில் வசித்து வரும் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் சாதிவெறியர்கள் மலம் கலந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விசாரிக்கச் சென்ற மாவட்ட ஆட்சியர் அங்கு நிலவிவந்த தீண்டாமை நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டார். கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட மக்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி.யின் அந்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்தன.
அதேவேளையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது தொடர்பாக 15 நாட்களை கடந்த பின்னரும் ஒருவரும் கைது செய்யப்படாதது அதிர்ச்சியளிக்கின்றது. காவல்துறை விரைவாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும், மாநில மனித உரிமை ஆணையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் போன்றவையும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
4. திருப்பூரில் தமிழர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22ல் மாபெரும் மூன்று அம்ச கோரிக்கை மாநாட்டை எஸ்.டி.பி.ஐ. கட்சி நடத்துகிறது.
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவேண்டும், தமிழக தனியார் வேலைவாய்ப்பில் தமிழருக்கு 75% வரை வழங்கும் வகையில் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமியற்ற வேண்டும், கொங்கு மண்டலத்தில் நலிந்துவரும் தொழில் வளத்தைப் பாதுகாத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் அந்த மாநாட்டில் பல்வேறு ஜனநாயக சக்திகளின் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். தமிழர்களின் வாழ்வாதார கோரிக்கைக்காக நடைபெறும் இந்த மாநாட்டில் அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.
5. தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட விசக்காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகின்றன. தற்போது பெய்த மழை காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளன. தேங்கி நிற்கும் நீரால் டெங்கு பரப்பும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. தினந்தோறும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தமிழக மக்களை பெரும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, டைபாய்டு காய்ச்சல்கள் பரவி வருகின்றன. அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.