எஸ்ஐ கையெழுத்தை போலியாக பதிவிட்ட அதிமுக வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

எஸ்ஐ கையெழுத்தை போலியாக பதிவிட்ட வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்புத்தூர் தாமரை நகரை சேர்ந்தவர் சங்கீதா. இவரது நிலம் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போன நிலையில் மீண்டும் புதிய ஆவணம் பெறுவதற்கு முயன்றுள்ளார்.அப்போது அவரை அனுகிய கோவை குனியமுத்தூரை சேர்ந்த மனோகரன், பெரியநாயக்கன்பாளையத்தில் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் பத்திர ஆவணங்கள் காணாமல் போனதுபோல் போலி சான்று தயார் செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுக்கலாம் என யோசனை கூறியுள்ளனர்.

இதற்கு சங்கீதா சம்மதம் தெரிவித்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சங்கீதாவின் நில பத்திரம் காணாமல் போனது போல காவல் நிலையத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பணியாற்றிய பாலமுருகன் என்ற உதவி ஆய்வாளர் கையொப்பமிட்டது போல் காணாமல் போனதற்கான சான்றிதழை தயார்செய்து அதனை கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த காணாமல் போன சான்றை பார்த்த கிணத்துக்கடவு சார் பதிவாளருக்கு சந்தேகம் எழுந்ததையடுத்து இதுகுறித்து உண்மைத்தன்மையை அறிய இலுப்பூர் காவல் நிலைய ஆய்வாளருக்கு அந்த சான்றிதழை அனுப்பி வைத்துள்ளனர்.இதனைப் பார்த்த இலுப்பூர் காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.அந்த சான்றிதழில் கையொப்பமிட்டதாக கூறப்படும் பாலமுருகன் தற்போது இந்த காவல் நிலையத்தில் பணியில் இல்லாததும் அவரின் கையெழுத்து போலியாக போடப்பட்டு இருப்பதும் காவல் நிலைய முத்திரையும் போலியாக தயாரித்து பதிவிட பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட இலுப்பூர் போலீசார் தனிப்படை அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த சங்கீதா, மனோகரன், ராஜேந்திரன் ஆகிய மூவரையும் கடந்த மாதம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் இவர்களுக்கு உடந்தையாக கோவையைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இலுப்பூரைச் சேர்ந்த பாபு என்ற வழக்கறிஞர் தான் எஸ்ஐயின் கையெழுத்தை போலியாக பதிவிட்டு ஆவணங்களை தயாரித்து தெரியவந்தது.இதனையடுத்து எஸ்ஐயின் கையெழுத்தை போலியாக பதிவிட்டு நிலப்பத்திரம் காணாமல் போனது போல் போலியாக ஆவணம் தயாரித்து சார் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்த வழக்கில் இலுப்பூரை சேர்ந்த வழக்கறிஞர் பாபுவை இலுப்பூர் போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தற்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் பாபு அதிமுகவில் வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளராக உள்ளார் என்று கூறப்படுகிறது.