
உளுந்தூர்பேட்டை அருகே 25 டன் ரேஷன் அரிசியை வெளி மாநிலங்களுக்கு கடத்த முயன்ற பெண் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதிகளில் தொடர் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருவதாக புகார் எழுந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவின்படி, உளுந்தூர்பேட்டை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிஎம்.ஆர்.மணிமொழியன் தலைமையில், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜா, தனிப் பிரிவு காவலர்கள் தன்ராஜ், அழகு செந்தில் மற்றும் காவலர்கள் ஆகியோர் கொண்ட குழு உளுந்தூர்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் எதலவாடி கிராம எல்லைக்கு உட்பட்ட விவசாய நிலப்பகுதியில் தகர ஷீட் போட்டு பெரிய குடோன் அமைத்து, அதில் 25 டன் ரேசன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலங்களுக்கு டாரஸ் லாரி மற்றும் மினி லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தபோது காவல்துறையினர் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
இதில் எறையூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி மனைவி மாசிலாராணி(47), நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து மகன் சிவப்பிரகாசம்(29), திருக்கோவிலூர் தாலுகா மொகலார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் ராமமூத்தி(25), சின்னசாமி மகன் முத்து(45) மற்றும் லாரி ஓட்டுனரும் மற்றும் உரிமையாளருமான தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து மகன் சக்திவேல்(33) என பெண் உள்பட ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ரேஷன் அரிசி கடத்துவதற்கு பயன்படுத்திய டாரஸ் லாரி ஒன்றும், பொலிரோ பிக்கப் மினி லாரி ஒன்றும் மற்றும் இருசக்கர வாகனம் ஒன்றும், 25 டன் ரேஷன் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.