உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் இரண்டு குழந்தைகளுடன் உயிர் தப்பிய தம்பதியினர்

உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தினால் திடீரென தீப்பற்றி எரிந்த கார்,  காரில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள்  மற்றும் கணவன் மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த சாத்தனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று  முன்னேசென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற போது எதிரே சென்று கொண்டிருந்த லாரியின் மீது மோதிய விபத்தில் திடீரென கார் முழுவதும் தீப்பற்றி எரிந்தது, அப்பொழுது அப்பகுதியில் இருந்த பொதுமக்கள்  காரில் பயணம் செய்தவர்களை  மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இத்தகவல் அறிந்த எடைக்கல் காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர், ஆனால் கார் முழுவதும் எரிந்த நிலையில் இரண்டு குழந்தைகள் மற்றும் தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காரில் பயணம் செய்தவர்கள் கேரளா மாநிலம், திருவனந்தபுரம், இந்திரா நகர் பகுதியை சேர்ந்த கோகுல் மகன் நிக்கில்(37) என்பவர் தனது மனைவி காவியா (28), குழந்தைகள் சிவகங்கா (03), சிவஆத்மிகா (01) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் கேரளாவில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.