இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் மீது அடையாளம் தெரியாது வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சி பகுதியில் உள்ள கார்நேசன் தெருவை சேர்ந்த நாகராஜ் மகன் நித்திஷ்குமார் வயது 17, அன்னை சத்தியா தெருவை சேர்ந்த பன்னீர் மகன் விஷ்வா வயது 16 மற்றும் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் மகன் மணிமாறன் வயது 17 ஆகிய மூன்று பேரும் நேற்று மாலை இரண்டு சக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அரசு தொழிற் பயிற்சி நிலையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் நித்திஷ், விஷ்வா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் மணிமாறன் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் தனியார் வாகனத்தில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இத்தகவலறிந்த உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தமிழ்வாணன் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூறு ஆய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்,
இந்த நிலையில் படுகாயம் அடைந்த மணிமாறன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்படை காவல்துறையினர் விரைந்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு விபத்தை ஏற்படுத்திய உளுந்தூர்பேட்டை ஜுப்பிலி தெருவை சேர்ந்த வேலு மகன் ஆட்டோ ஓட்டுநர் பிரசாந்தை கைது செய்தனர், மேலும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.