உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமர்ப்பிக்கப்பட்டது பொது சிவில் சட்ட வரைவு மசோதா

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம், பொது சிவில் சட்ட வரைவு மசோதா சமர்ப்பிக்கப்பட்டது.

உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி 2-வது முறையாக பொறுப்பேற்ற பிறகு, தாம் அளித்திருந்த வாக்குறுதிப்படி கடந்த 2022 மார்ச் 23-ம் தேதி நடத்தப்பட்ட முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், பொது சிவில் சட்டத்தை உத்தராகண்ட் மாநிலத்தில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழுவை மாநில அரசு கடந்த 2022 மே 27-ம் தேதி அமைத்தது. இக்குழுவில், அவருடன் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, உத்தராகண்ட் முன்னாள் தலைமைச் செயலாளர் சத்ருகன் சிங், டூன் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேகா தங்வால், சமூக ஆர்வலர் மனு கவுர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், இக்குழு தனது இறுதி அறிக்கையை, முதல்வர் புஷ்கர் சிங் தாமியை சந்தித்து வழங்கியது. முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு இதுகுறித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் தளத்தில், “உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் எங்கள் அரசு உறுதியுடன் இருக்கிறது. வரவிருக்கும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் அதற்கான மசோதா கொண்டு வரப்பட்டு, சட்டமாக இயற்றப்படும். இதன் மூலம் மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, பிப்ரவரி 2 ஆம் தேதி மாநில அரசிடம் தனது வரைவு மசோதாவை சமர்ப்பிக்கும். அதன்பிறகு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.

திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் தத்தெடுத்தல் உள்ளிட்ட விவகாரங்களில் மத வேறுபாடு இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்த பொது சிவில் சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பது பாஜக.வின் முக்கிய கொள்கையாக உள்ளது.