இல்லம் தேடி கல்வி  மையங்களில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி பொங்கல் சீர் கொண்டு வந்த கட்டியாவயல் தன்னார்வலர்கள்.

இல்லம் தேடி கல்வி மையங்களில் மாணவர் சேர்க்கையை வலியுறுத்தி பொங்கல் சீர் கொண்டு வந்து பொங்கல் பண்டிகையை இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள்,மாணவர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

விவசாயிகளுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.அதே போல் இந்த ஆண்டு வருகிற 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகையும்,16 ஆம் தேதி திங்கட்கிழமை மாட்டுப் பொங்கலும் உற்சாகமாக கொண்டாடப்பட இருக்கிறது.

பொங்கலுக்கு இன்னும் 1 நாள் உள்ள நிலையில் மாணவ,மாணவிகளுக்கிடையே சமத்துவம் மற்றும் சகோரத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி,கல்லூரிகளில் மாணவ,மாணவியர்கள் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில்  புதுக்கோட்டை ஒன்றியம்,கட்டியாவயல் குடியிருப்பு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் சமத்துவ பொங்கல் விழா,இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா,கலைவிழா என முப்பெரும் விழா தன்னார்வலர்களால் கொண்டாடப்பட்டது.

தன்னாரவலர்கள் வினோதா,மீனாட்சி,பிரியதர்ஷினி,கலைச்செல்வி,மலர்விழி,ஆனந்தி ஆகியோர் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி,வெல்லம்,முந்திரி,திராட்சை என பொங்கல் சீர் வரிசைப் பொருட்களுடன் கரும்பினை  கொண்டு வந்திருந்தனர்.பொங்கல் சீர் கொண்டு வரும் போது  கட்டியாவயல் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் அரசுப்பள்ளியிலும்,இல்லம் தேடி கல்வி திட்ட மையங்களிலும் தங்களது குழந்தைகளை சேர்த்து படிக்க  வைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பின்னர் தன்னார்வலர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த பொங்கல் பானையில் பொங்கல் வைத்து கும்மியடித்து பொங்கல் விழாவை உற்சாக கொண்டாடினார்கள்.அதன் பிறகு தன்னார்வலர்கள் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கலை கொடுத்து தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அதன் பின்னர் இல்லம் தேடி கல்வி மையம் தொடங்கிய 2 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.இதில் இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனியசாமி,இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஆலோசகர் மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டு 2 ஆம் ஆண்டு தொடக்க நிகழ்வை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.பின்னர் மையம் தொடங்கிய 2 ஆம் ஆண்டினை குறிக்கும் வகையிலான கேக்கினை மையத்தில் பயிலும் சிறு குழந்தைகள் வெட்டினர்.பின்னர் அவர்கள் தங்களுக்குள் கேக்கினை ஊட்டி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

நிறைவாக  மைய மாணவர்களின் சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டினார்கள்.

நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் வீரமணி, அண்டக்குளம் அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வக்குமார்,நார்த்தாமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மணிகண்டன்,எம்.பனம்பட்டி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏறபாடுகளை தன்னார்வலர்கள் வினோதா,மீனாட்சி ஆகியோர் செய்திருந்தனர்…