
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் இயற்பியல் பாடக் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக, தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 1.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் 40 ஆயிரத்து 376 மாணவர்கள், 70 ஆயிரத்து 594 மாணவிகள், ஒரு திருநங்கை என மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 971 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களில் 19 ஆயிரத்து 867 மாணவர்கள் நீட் தேர்வை தமிழில் எழுத விருப்பம் தெரிவித்து உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்து 11 ஆயிரத்து 888 மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர்.
வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்பட்டது. தமிழ், மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் முதன் முறையாக சேர்க்கப்பட்டு மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.
இந்தநிலையில், நாடு முழுவதும் 3,862 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு பெற்றது. நீட் தேர்வு முடிவடைந்ததும் தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் நிருபர்கள் தேர்வு குறித்து கேட்டனர். அதற்கு பெரும்பாலான மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்தது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து தேர்வு நடத்தப்பட்டது. கெடுபிடி ஏதும் இல்லை. ஆனால், இயற்பியல் பாட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது எனக் கூறினர். ஒரு சில மாணவர்கள் வேதியியல் பாட கேள்விகளும் கடினமாக இருந்ததாகக் கருத்து தெரிவித்தனர்.