இந்திய வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் கந்தர்வகோட்டையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

கூடுதல் பேருந்து வசதி வேண்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன் இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று அந்தப் பகுதியில் கூடுதல் பேருந்து வசதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினரோடு இணைந்து போராட்ட களத்திற்கு வந்தனர். இதனால் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டமாக மாறியது.

கந்தர்வகோட்டை கறம்பக்குடி வழித்தடம் மற்றும் கந்தர்வகோட்டை தஞ்சாவூர் வழித்தடம், கந்தர்வகோட்டை புதுக்கோட்டை வழித்தடம், கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி வழித்தடங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் அரசு நகர பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

போதிய பேருந்து வசதி இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான நிலையில் மாணவர்கள் பயணிப்பதாகவும் குற்றம் சாட்டி அவர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீஸாருக்கும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த அமைப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததன்பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.