இந்தியாஎகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து இருதரப்பு உறவை மேம்படுத்த முடிவு

பிரதமர் நரேந்திர மோடி – எகிப்து அதிபர் அல் சிசி முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே இன்று பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

குடியரசு தின சிறப்பு விருந்தினராக புதுடெல்லி வந்துள்ள எகிப்து அதிபர் அல் சிசி, பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இந்தியாவுக்கும் எகிப்துக்கும் இடையேயான 75 ஆண்டுகால நட்புறவு குறித்தும், அதனை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம், அறிவியல், கலாச்சாரம், மக்கள் தொடர்பு, பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் ஆகியவை குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, 75 ஆண்டு கால நட்புறவை நினைவுகூரும் தபால் தலையை பிரதமர் நரேந்திர மோடியும் எகிப்து அதிபர் அல் சிசியும் இணைந்து வெளியிட்டனர். மேலும், இரு தலைவர்கள் முன்னிலையில், இரு நாடுகளுக்கு இடையே இணைய பாதுகாப்பு, கலாச்சாரம், தகவல் தொழில்நுட்பம், ஒளிபரப்பு உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அதற்கான ஆவணங்கள் இருதரப்பிலும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இதையடுத்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ”இந்தியாவும் எகிப்தும் மிகப் பழமையான கலாச்சாரங்கள். இருநாடுகளுக்கு இடையே வர்த்தக உறவு இருந்ததற்கான வரலாற்று ஆவணங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் மேம்பட்டுள்ளது. ஜி20 கூட்டமைப்பின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள எகிப்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சியும் திறன் மேம்பாடும் அதிகரித்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவும் இணைய குற்றங்களுக்கு எதிராக இணைந்து செயல்படவும், இறக்குமதி – ஏற்றுமதியை அதிகரிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் 12 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் குறித்த கவலையை இந்தியாவும் எகிப்தும் பகிர்ந்துகொண்டுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன” என தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய எகிப்து அதிபர் அல் சிசி, ”இந்தியாவின் பிரம்மாண்டமான வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி உடனான பேச்சுவார்த்தையின்போது, வர்த்தகம், முதலீடு ஆகியவற்றை அதிகரிக்க ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தியாவும் எகிப்தும் பழமையான கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் கொண்டவை. இந்த பின்னணியில் இரு நாடுகளுக்கு இடையே சுற்றுலாவை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். பயங்கரவாதம் குறித்தும், எகிப்து – இந்தியா பாதுகாப்பு குறித்தும் இருவரும் ஆலோசித்தோம். ஜி20 மாநாட்டின் சிறப்பு விருந்தினராக எகிப்து அழைக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தேன். பிரதமர் நரேந்திர மோடியை கடந்த 2015-ல் நியூயார்க்கில் சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவர் இந்தியாவை முன்னோக்கி அழைத்துச் செல்வார் என்பது எனக்குத் தெரியும். அவரை எங்கள் நாட்டிற்கு வருகை தருமாறு அழைத்திருக்கிறேன்” என தெரிவித்தார்.